நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மகனே! என்னை மன்னித்துவிடு!


பத்துமாதங்கள் சுமந்து
பலசிரமங்களுக்கிடையில்  வளர்த்து
மழையிலும் வெயிலிலும்  
மார்பிலும் தோளிலும் சாய்த்தபடி
ஏறாத ஆஸ்பத்திரிகளெல்லாம் ஏறி
கண்ணயறாது பார்த்து காத்தபோது
கனக்காத மனம் அறியாத பாரம்!

எங்கோ! யாரி மேற்பார்வையிலோ!
எனதன்பு மகனை விட்டு விட்டு
எடுதடி வைக்கும்போது
ஏற்பட்ட மனபாரமதை
என்னவென்று  சொல்வேன்!
தொப்புள்கொடி உள்ளுக்குள்ளே
துடிதுடித்ததே ஒரு துடிப்பு!
ஆயிரம் குடம்கொண்டு
அமிலத்தை ஊற்றியதுபோல்
அந்நேரம் கருகியதே உன்னுடம்பு!
உள்ளங்காலில் நரம்புக்குள்ளே
ஊர்ந்து ஏறியதே விசப்பாம்பின் கொத்து!
நாடித்துடிப்பெல்லாம் அடங்கிபோக
வெற்றுடம்புமட்டும் சேர்ந்ததே ஊர்வந்து!

நடைபயிலும் வயதில்
உன் நடைகண்டு ரசித்தவள்!
வாய்பேசும் வயதில்
உன் வார்த்தைகள் கேட்டு வியந்தவள்!
ஓடியாடும் வயதில்
உன்னை ஓடவிட்டு மகிழ்ந்தவள்!
ஒருநொடி உன்முகம் சுணங்கினாலும்
ஊரைக்கூட்டி அழுதவள்!

”ஆனாலின்றோ”
ஏடெடுத்து படித்து ஏற்றமோடு வளர
கல்வியென்னும் ஒளியைக்கொண்டு-இந்த
கலியுலம் வென்றிட
தரணியிலே எனது மகன்
தவப்புதல்வனாய் வாழ்ந்திட
தனியே விட்டு வந்தேனே
பள்ளி விடுதியில்
தவிக்கவிட்டு விட்டேனே!
விட்டு விட்டு வீட்டில் வந்து
விளக்கில் விழுந்த
விட்டிலாகிப் போனேனே!

மகனே என்னை மன்னித்துவிடு!
மடிசுமந்தாய் மாற்றாரிடத்தில்
விட்டுவிட்டாளே என மருகிவிடாதே!
எல்லாம் உனது நன்மைக்குத்தான்
என்றெண்ணி எடுத்து ஓதிப்படி!
எள்ளளவும் இருக்காது
என்றைக்குமே தாய் தந்தையன்பில் கலப்படி!

இது அறிவியல் உலகமடா கண்ணே!
இதில் அறிவில்லாமல் வாழ
இயலாதடா மகனே!
அதனால்தானடா உன்முன்னே!
அழுகையெல்லாம் அடக்கிக்கொண்டு
அலறும் உணர்வையெல்லாம் ஒடுக்கிக்கொண்டு
ஆறுதாலாய் பேசுவதுபோல் நடித்தேன்
அலறித்துடிக்கும் உயிரின் வலியை பொறுத்தேன்
அதனைமீறியும் உதிர்ந்துவிட்ட கண்ணீர் துளியை
நீ அறியுமுன்னே துடைத்தேன்!

தவிப்புகள் இருக்கத்தான் செய்யும்
தாங்கிக்கொள்ளடா அன்பு மகனே! என
உனக்காறுதல் சொல்லி வந்தேனே
தாரை தாரையாய் கண்ணீர் வருதே
தாங்கவில்லையே எனது நெஞ்சமே!

அன்பு மகனே!
அங்கிருந்துகொண்டு
அழுதுமட்டும் விடாதே!
அடங்கிபோய்விடும் எனது
அத்தனை உணர்வுகளும்!
அணுவளவும் குறையாது எப்போதும்
அலைபாயும் எனக்குள் உனது நினைவுகளும்!


ஈன்றவர்களின் இருதயங்கள்
ஈனப்பட்டு அழுதபோதும்
ஈருலக வாழ்க்கையிலும் எங்கள் மகன்
எவ்வித சிரமங்களும் படக்கூடாதென்றே
எண்ணுவதே பெற்றோர்களின் உள்ளம்

ஈ எறும்பு அண்டாமல்
ஈரக்குலைக்குள் காத்த உன்னை
தீயவைகள் எதுவும் தீண்டிடாது
தாய்தந்தையின் பிராத்தனைகள் உனைக்காக்கும்!

ஐந்து வேளையும் தொழுதிடு!
அகிலம் ஆளும் இறைவனை
அழுத்தமாய் மனதில் நினைத்திடு!
அதோடிந்த அன்னைதந்தையையும் சேர்த்திடு!
அங்குள்ளோரிடமும் அன்பு கொண்டு நடந்திடு!
அறிவை வளர்த்து அகிலம் போற்ற கற்றிடு!
இம்மை மறுமை இரண்டிலும்
இன்பமாக வாழ்ந்திடு-எங்கள்
இதயங்கள் குளிர்ந்திட வாழ்ந்திடு...

 ------------------------------------------------------------
எனது அன்பு மகனை நேற்றைய முந்தினம் குற்றாலம் சையத் ரெசிடன்சஸ் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டு வந்துள்ளோம். முதல் முறையாக வேற்றிடத்து வாசம் என் குழந்தைக்கு. எனக்கோ வெற்றிடமானது வீடும் மனமும்.. என்ன செய்ய காலத்தோடு படுவேகமாக ஓடவேண்டிய சூழலில் பெற்று வளர்க்கும் பிள்ளைகளை கூடயிருந்தே படிக்கவைக்கமுடியா சூழ்ச்சியும் உருவாகிவிடுகிறது. இருதயம் இளகி விட்டு வரவில்லை இதயம்  இறுகி விட்டுவந்தேன் என்னைபோன்று எத்தனை பெற்றோர்கள் தவித்திருப்பார்கள்.
இன்று அலைபேசியில், காலை எழுந்ததும் குளித்து, தொழுதுவிட்டு,  குர்ஆன் ஓதிவிட்டு, நானாக டிரஸ் போட்டுகொண்டு சாப்பிடபோகிறேன்மா என்றதும் தொண்டைக்குள் ஏதோ அடைத்ததுபோன்று எனக்கு பேச்சே எழவில்லை இருந்தபோதும்.அதனை மறைதுக்கொண்டு அன்பாய் பேசிவிட்டு இரவு போன் செய்கிறேன்டா செல்லம் என்று வைத்துவிட்டு  சற்றைக்கே சற்று மனம் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதும் இதை எழுதுகிறேன்.. என் மகனின் நற்படிப்புக்காவும் மற்றும் அவனின் மனதைரியத்திற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளையும் துஆக்களையும் வேண்டுகிறேன்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது