நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சஞ்சாரமிடும் நினைவுகள்.



வான நிலப்பரப்பில்
மின்னல் கீற்றில்
முடைந்த பாயொன்றை
மெல்ல விரித்து
மெளனப் புன்னகை பூத்தபடி
முகங் கவிழ்ந்து கிடக்கிறேன்

ஒவ்வொரு நட்சத்திரங்களும்
ஒளிக் கதிர்களை பாய்ச்சிட
உன்பார்வை தந்த ஸ்பரிசங்கள்
உள்நெஞ்சில் ஊஞ்சலாட
உள்ரங்க அறைகளெல்லாம்
ஒளிவெள்ளம் பரவக் காண்கிறேன்

வனாந்திரக் காட்டில்
வாகை சூடிய மேகங்கள்
வலம் வரும் வேளையில்
வண்ண மயிலொன்று
தோகை விரித்தாடும் நிலையில்
துள்ளியாடி மகிழ்கின்றேன்

மெளனங்கள் மேடையமைத்து
மொழிபெயர்த்து வாசிப்பதை
முற்றத்து நிலவாகி பார்த்து
மூங்கில் காதுகொண்டு கேட்டு
மெல்ல மெல்ல ரசித்து
மெய்மறந்து சிரிக்கின்றேன்

வளமில்லா வயல்கள்
வாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்

சஞ்சாரமிடும் நினைவுகளில்
சல்லடையாக்கி போகின்றேன்
சாரல்கொண்ட தூறலிலும்
சந்தோஷமாய் நனைகின்றேன்
சருகுகளின் சத்ததிலும்
சங்கீத ஒலி கேட்கின்றேன்

இவையத்தனையும் உணருகின்றேன்
இரவில் கனவுக்குள் உலவுகின்றேன்
இடையில் கற்பனைகள் புகுந்தாலும்
இதயக்கூட்டுக்குள் இன்புருகின்றேன்
எனக்குள் உன்னைக் காண்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாகிப் போகின்றேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது