நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”வாய்ப்பும் வியப்பும்”

வியப்பு வியப்பு

விண்கண்டு,
விண்ணில் உலவும் வினோதங்கள் கண்டு
மண்கண்டு,
மண்ணில் உலவும் மனிதர்கள் கண்டு
வான்கண்டு,
வான்தூவும் மழைகண்டு
வனம்கண்டு,
வனத்திலும் இனம்கண்டு

பூக்கும் பூமிகண்டு,
பெண்மையும் பூப்பது கண்டு
பூவைவண்டு உண்பது கண்டு
பூவைக்குள் பூகம்பம் வெடிப்பது கண்டு

உச்சியிலெழும் அருவிகண்டு
உருண்டுவிழும் அழகுகண்டு
உடலில் ஓடும் உயிர்கண்டு
ஊடுருவிப்பாயும் குருதிகண்டு
ஊர்ந்துசெல்லும் உயிரினம் கண்டு

மூச்சிகாற்று சுழல்வது கண்டு,
மூங்கிலில் இசை வருவதுகண்டு
முற்றத்தில் குருவி வந்தமர்ந்து,
முனங்கும் பாடல் கண்டு

ஆணும் பெண்ணும் இணைவதுகண்டு,
அதிலுருவாகும் உயிர்கள் கண்டு
அழிந்துவிடும் எனத்தெரிந்தும்,
ஆட்டம்போடும் உடல்கள் கண்டு

காகிதம் மனிதனை ஆள்வது கண்டு,
கானல் தண்ணீராய் தெரிவது கண்டு
காதல் காதல் காதலென்று,
கலங்கித் தவிக்கும் மனங்கள் கண்டு

பாசங்கள் மறந்து பணத்தின் பின்னே
பேயாய் அலையும் மனிதர்கள் கண்டு
பொய்முகம் புனைந்து வாழ்வது கண்டு,
பண்புகள் நாளும் குறைவதுகண்டு
பிறப்பும் இறப்பும் கண்டு,
பயப்படாமல் பாவம் செய்வது கண்டு

இறுதியாய்

என்வீட்டுக்கு கண்ணாடியில்
என்னைக்கண்டு, என்விழிகள் கண்டு
எனக்குள் எழுந்தடங்கும்
எண்ணங்கள் பலகண்டு

வியப்பு வியப்பு
இருவிழியும் மனவிழியும்
விரியும் வியப்பு
வியப்பால் வியக்க வைத்து
வித விதமானவைகளையும்
வினோதங்களையும்,
வியப்போடு அறியத் தந்த - ஏக

இறைவனை
வணங்க கிடைத்திருக்கும்
இந்த அரிய வாய்ப்பு
இவ்வுலகில் எனக்குக் கிடைத்த
இன்றியமையா இப்பிறப்பு....

டிஸ்கி// இது ஒரு கவிதைபோட்டி, இந்த தலைப்பை தந்து எழுதச்சொன்னார்கள் எழுதிவிட்டேன்.

நம்ம கிறுக்கள் பாசையில். வரும் 24 நாளாந்தேதி முடிவாம்,
ஏதாவது தேறுமா? நீங்களும் சொல்லுங்களேன் எப்டிக்கீதுன்னு.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது