நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கனவிலாவது!!!


இருள் மெல்ல இரவைத் தழுவ
இமைகள் இரண்டும் விழியைத் தழுவ
மூடிய கண்களுக்குள்
அறிப்படாதவைகள் அனைத்தும்
உணர்வென்னும் கனவில்
உதிக்கத் தொடங்கியது

அழகிய விடியல்
விடியலை உணர்த்தும் வகையில்
காகத்தின் கரையும் குரல்
கண் திறந்ததும் எதிரில்
அன்னையின் அன்பான முகம்
கண்டிப்பு கலந்த பாசத்தோடு
தந்தையின் தலைகோதல்

வீட்டு முற்றத்தில்
வீசிய இளங்காற்றில் ஆடிய
வாசனை மலர்கள்
அடுக்களையில் எறிந்த
அணையா நெருப்பின் சுவாலை
அதில் போட்டுத் தந்த
அன்புகலந்த தேநீர் 
அதிலெழுந்த ஆவியெனும் புகை

வெளியில் எட்டிபார்த்தபோது
நீல ஆகாயம் அதில்
நீந்தும் கருப்பு வெள்ளை மேகம்
நடக்க இறங்கியபோது
சட சடவென வந்து விழுந்த மழையில்
தேகம் தொட்ட சிறு துளிகள்
நேசத்தோடு உள்ளங்காலின்
நரம்புகளை ஈர்த்த ஈரமண்

பச்சை மரம் அதில் பழுத்தயிலை
பாடுங்குருவியின்  படபடக்கும் சிறகு
சுற்றும் முற்றும்
சூழ்ந்த இயற்கை -இதுவரை
விழிகள் கண்டிராத
விசித்திர நிறங்களெல்லாம்
விழிகளுக்குள்  தெரிய!

பொழுது விடிந்துவிட்டது
பார்த்து பத்திரமாக எழுந்திரியென்று
செவிகளுக்குள் நுழைந்தது
செவிலித்தாயின் குரல்
பார்வையற்றோர் இல்லத்தில்
படுத்திருந்த எனது காதில்

இறுக்கி மூடியிருந்த விழிகள் உருள
இமைகள் வேகமாக திறக்க
வெளிச்சம் அங்கே மெல்ல விலக
வெளிறிப்போன மனதுக்குள்
வேதனைகள் நிரம்ப

உணரமட்டுமே தெரிந்த அத்தனையும்
உண்மையில் உலாவியது
உறக்கக் கனவில்
நிஜங்களையும் நிறங்களையும்
பார்க்கயிலாவிடிலும்
நினைவுகளாய்
கனவுகளிலாவது வந்ததேயென

உற்று நோக்கிய என்
குருட்டுப் பார்வைகளின் வழியே-இந்த
உலகம் எப்போதும்போல் தெரிந்தது
கறுப்பாய் காரிருள் சூழ்ந்தபடி!..

கனவு என்ற தலைப்பிற்க்கு தமிழ்த்தேர் இம்மாத இதழில் வெளியான கவிதை. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது