நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னடி உலகமிது!

வஞ்சிக்கப்பட்ட
தன் கற்புக்காக
வழக்கு தொடர்ந்தாள்
பேதை பெண்ணொருத்தி
வழக்கும் தொடர்ந்தது
வாழ்வும் தொலைந்தது

குறுக்கு விசாரனையில்
குன்றிபோனது மனம்
மீண்டும்
களங்கப்படுத்தபட்டது மானம்
குமுறியழுதது மனம்

தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டதென
தெரிவிக்கப்பட்டதும்
வெளியில் வந்த வேளையில்
பளிச் பளிச்—என
பத்திரிக்கைக்காரர்களின்
கேமராக்களும் கேள்விகளும்
காதையும் கண்ணையும் கூச

மேலும்
காற்றில்விடப்பட்டது மானம்
கலங்கியது மனம்

குமுறிய மனதோடும்
கொட்டுகின்ற கண்ணீரோடும்
இருதலைக் ”கொள்ளியாய்”
இரவு விடிய
இருட்டு முடியும்முன்னே
வெட்டவெளிச்சமானது
இருட்டில்
இவளுக்கு நடந்தகொடுமை
முதன்மைச் செய்தியாய்!

மீண்டும்
களங்கப்படுத்தப்பட்டது மானம்
கதறியழுதது மனம்





தவறாதபோதும்
தனக்கிந்த நிலையா?
பொன்மானும் துடித்தாள்
கண்ணீரும் வடித்தாள்
தன்மானம் காக்க
தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே
தன்தேகம் முழுதும்
தீ யிற்கு இரையாக்கி
தனக்குத் தானே
தீர்ப்பெழுதிக்கொண்டாள்

மதியிருந்தும் கெட்ட
மாந்தரை நினைக்கையில்
மதியில்லா மிருகம் தேவலை
இவள் செய்துகொண்ட தற்கொலை
அதுவும்
இவளுக்கு இழிநிலை

இதுவா மனிதயினம்
இதுவா மனித குணமென்று
எங்கிருந்தோ ஒரு
ஓநாயின் ஊளை கேட்டது
அது
மனச்சாட்சியுள்ள மனித
மனச்செவியை மட்டும்
சுட்டது...

// தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை//

[இன்றையகாலத்தில் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், அதிகமதிகம் பேசப்பபடுபவை இவைகளே! யாரைச்சொல்லி நோவது!
மனிதன் மனசாட்சியை மறந்ததாலா?
இல்லை தான் மனிதன் என்பதையே மறந்ததாலா?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

30 கருத்துகள்:

  1. ம்ம்......ஒரு கதையே சொல்லுது இந்த கவிதை.

    பதிலளிநீக்கு
  2. //தீர்ப்பெழுதும் முன்பே
    தன்தேகம் முழுதும்
    தீ யிற்கு இரையாக்கி
    தனக்குத் தானே
    தீர்ப்பெழுதிக்கொண்டாள்//

    அருமை ....வாழ்த்துகள்...\
    கவிதை படித்ததும் வேதனை தீயில் வெந்து போகிறது மனது...விடிவு எப்போது???

    பதிலளிநீக்கு
  3. இதனாலேயே பல பெண்கள் நடந்ததை வெளியில் சொல்லவே பயப்படறாங்க. அந்த பெண்ணின் மனநிலையை மனதில் கொண்டு பத்திரிக்கைகள் போட்டோ போடுவதை தவிர்கலாம். மாட்டியவனுக்கு ஒரே தண்டனைதான் பொது இடத்தில் தூக்கு . நோ.. பரிதாபம் + கருனை + சிறை = மக்கள் பார்த்து திருந்தனும் .

    பதிலளிநீக்கு
  4. //இதுவா மனிதயினம்
    இதுவா மனித குணமென்று
    எங்கிருந்தோ ஒரு
    ஓநாயின் ஊளை கேட்டது
    அது
    மனச்சாட்சியுள்ள மனித
    மனச்செவியை மட்டும்
    சுட்டது//

    வலியுள்ள கவிதை
    இதுவே ஒரு கதை சொல்கிறது

    பதிலளிநீக்கு
  5. மனிதன் மனிதனை நேசிக்கக் கற்றுக் கொண்டாலே ஒழிய இறைவனை நேசித்து இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வருமென்று நான் நம்ப வில்லை.இறைவனின் பெயரால் தான் பல தில்லுமுல்லுகளை நம் சமூகம் நடத்திப் போகிறது. ஆயினும் உலக ஒழுங்கிற்காக இறைவனையாவது நாம் தொழுது நல்லவர்களாக முயற்சித்தல் அவசியமாகிறது. உங்கள் கவிதைக்கு என் வாழ்த்து.
    ரமோனா

    பதிலளிநீக்கு
  6. யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு சூடான செய்திகள் வேண்டும். நாளை சூடான செய்திகளில் நாமும் இடம் பெறக்கூடும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  7. வ‌லியுடைய‌ வ‌லிமையான‌ க‌விதை..

    பதிலளிநீக்கு
  8. வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இப்படி எத்தனை எத்தனை பெண்களின் கண்ணீரில் ஒரு காவியமே.. நல்ல அருமையான கவிதை மலிக்கா அக்கா.

    மனம் கல்லாய் போன‌
    மனிதனிடமிருந்து
    வந்தது வார்த்தைகள்
    கல் தடுக்கிவிட்டதென‌

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை..வாழ்த்துகள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  10. //எங்கிருந்தோ ஒரு
    ஓநாயின் ஊளை கேட்டது
    அது
    மனச்சாட்சியுள்ள மனித
    மனச்செவியை மட்டும்
    சுட்டது..//

    நச் வரி...

    பதிலளிநீக்கு
  11. வழக்கு போட தைரியம் இருந்த பெண், கடைசியில் நொந்து தற்கொலை செய்துகொண்டாள் என முடிக்காமல், தன் முயற்சியில் வென்றாள்னு முடிச்சுருக்கலாம் மலிக்கா. அட்லீஸ்ட் படிக்கிறதுக்காவது நம்பிக்கையூட்டும் விதமா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. 1st is not good... so
    please publish this "karuthurai"

    முதல் பாராவிலேயே முடிவினை (climax) சொல்லிவிட்டீர்கள்...
    எங்கெனமெனில்....
    ////வஞ்சிக்கப்பட்ட .... பேதை பெண்ணொருத்தி..... வாழ்வும் தொலைந்தது////

    அடுத்த பாராவிலே..
    ///குன்றிபோனது மனம்....
    குமுறியழுதது மனம்///
    அப்பெண்ணின் மனவேதனையை... எப்படி இப்படி?


    ////பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும் கேள்விகளும்
    காதையும் கண்ணையும் கூச....
    காற்றில்விடப்பட்டது மானம்... கலங்கியது மனம்////

    அந்த பத்திரிக்கைக்காரர்களின் வீட்டுச் சம்பவத்தை
    இப்படி வெளியிடுவார்களா? அல்லது Baner Newsஆக போடுவார்களா....?
    பத்திரிக்கைக்காரர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்....

    ///இரவு விடிய.... இருட்டு முடியும்முன்னே... வெட்டவெளிச்சமானது.... இருட்டில்... இவளுக்கு நடந்தகொடுமை..... முதன்மைச் செய்தியாய்!///

    ஜனகராஜ் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் "மலிக்கா..! எப்படி...இப்படி..? என்னமப்போங்க..! கலக்குறீங்க...!"

    'இ' என்ற எழுத்தைக் கொண்டு எதுகைமோனையுடன் வார்த்தைகள் சரளமாய்...
    இதுக்கே ஓர் சபாஷ்...!

    ////தீர்ப்பெழுதும் முன்பே.... தன்தேகம் முழுதும்.... தீ யிற்கு இரையாக்கி....
    தனக்குத் தானே.... தீர்ப்பெழுதிக்கொண்டாள் ////

    தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக
    நீதிமன்றத்திற்கு சென்ற அவள்....
    நீதி கிடைக்கும் முன்பே...
    அநீதியாய்
    'தீ'யிட்டுக் கொண்டாள்....
    இதற்கு யார் காரணம்?

    உளமார வருத்தப்பட வேண்டியவர்கள்...
    ஊர் முழுவதும் பரப்பிவிட்டனர்...

    யார் குற்றவாளி...
    "பத்திரிகை தர்மம்"எனும் போர்வையில் உலவுபவர்கள்தான்...

    //இதுவா மனிதயினம்.... இதுவா மனித குணமென்று... எங்கிருந்தோ ஒரு....
    ஓநாயின் ஊளை கேட்டது////

    நீங்கள் மனிதர்களா? என பிணங்களைத் தின்னும் ஓர் ஓநாயே ஊளையிட்டது என்றால் கொடிதிலும்கொடிய கொடுமை....
    வலியின் வார்த்தைகள் இவை கவியே...

    அவ்வூளைக்கு பதில்...?
    //மனச்சாட்சியுள்ள மனித மனச்செவியை மட்டும் சுட்டது// இந்த வரிகள்தான் கவனிக்கவேண்டிய வரிகள்....

    எல்லோர் காதிலும் விழவில்லை... சுடவில்லை...
    மனசாட்சியுள்ளவனை மட்டுமல்ல... அவன் மனச் செவியையும் சுட்டது...
    சுபெர்ப்...!
    சரி..!
    அவன் யார்? எங்கேயிருக்கிறான்?

    கலைவாணர் என்.எஸ்.கே. சொன்னதைப்போல "எங்கே தேடுவேன்... மனசாட்சியுள்ளவனை எங்கே தேடுவேன்.." என தேடி துழாவ வேண்டியதுதான்.


    ///இன்றையகாலத்தில் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், அதிகமதிகம் பேசப்பபடுபவை இவைகளே! யாரைச்சொல்லி நோவது!
    மனிதன் மனசாட்சியை மறந்ததாலா? இல்லை தான் மனிதன் என்பதையே மறந்ததாலா?]///

    மேற்சொன்ன தங்களின் வரிகளைப்பற்றி சொல்லவேண்டுமானால்...

    ஒருவனுடைய வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

    "அன்பும்
    பாசமும்
    மனிதமும்
    மாண்பும்
    மனிதாபிமானமும்
    மனிதநேயமும்
    மரித்துப்போய்........" ........................என்றும்;


    'மனிதம்
    மறைந்துவிட்டதா..? - இல்லை
    மரித்துவிட்டதா..?" .......................என்றும்

    "புரையோடிய
    புற்றுநோய் கண்டு
    புதைந்துவிட்டதா...?
    மனிதாபிமானமும்.....
    மனித நேயமும்...." ..........................என்றும்

    "எங்கு
    திரும்பினாலும்
    அலையும் நாயாய்....
    நயவஞ்சக நரியாய்...
    அபகரிக்கும் வன்புலியாய்....
    பிணம் தின்னும் கழுகாய்...
    இருட்டில் உலவும் பேயாய்...
    மிருக குணங்களுடன் 'மனிதன்'..."................ என்றும்

    இயற்கையை எதிர்த்து...
    செயற்கையாய்..
    மனிதாபிமானமும்
    மனிதநேயமும்
    மறந்த -
    மனதளவில்
    மரித்துப்போன.......
    மூளைச் செயலிழந்த
    மனிதனாகிவிட்டான் இன்றைக்கு.... .............. என்றும் வடித்த சாரி... படித்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

    (ஹி.... ஹி... ஹி... அந்த 'ஒருவன்' அடியேன்தான்...
    எனது கவிதைகளில் 'மனிதம்' என்ற வரிகளை
    தேர்ந்தெடுத்து தங்கள் பின்னூட்டத்திற்கு)


    மொத்தத்தில்....

    SUPER கவிதை.....
    அதோடு
    வலியுள்ள (மனம்) -
    வலிமையுள்ள (சமூகத்தை சுட்டெரிக்கும்)
    வரிகள் கொண்ட கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்....
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  13. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    ம்ம்......ஒரு கதையே சொல்லுது இந்த கவிதை//

    முதல் வருகைக்கும். ம்ம் கருத்துக்கும் மிக்க நன்றி சை.கொ. ப.

    பதிலளிநீக்கு
  14. seemangani கூறியது...
    //தீர்ப்பெழுதும் முன்பே
    தன்தேகம் முழுதும்
    தீ யிற்கு இரையாக்கி
    தனக்குத் தானே
    தீர்ப்பெழுதிக்கொண்டாள்//

    அருமை ....வாழ்த்துகள்...\
    கவிதை படித்ததும் வேதனை தீயில் வெந்து போகிறது மனது...விடிவு எப்போது???//

    விடியுமென காத்திருப்போருக்கு விடிவு பிறக்க வேண்டுவோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீமாங்கனி..

    பதிலளிநீக்கு
  15. ஜெய்லானி கூறியது...
    இதனாலேயே பல பெண்கள் நடந்ததை வெளியில் சொல்லவே பயப்படறாங்க. அந்த பெண்ணின் மனநிலையை மனதில் கொண்டு பத்திரிக்கைகள் போட்டோ போடுவதை தவிர்கலாம். மாட்டியவனுக்கு ஒரே தண்டனைதான் பொது இடத்தில் தூக்கு . நோ.. பரிதாபம் + கருனை + சிறை = மக்கள் பார்த்து திருந்தனும்.

    மிகசரியாக சொன்னீர்கள் ஜெய்லானி.
    கருணையென்பது மனிதருக்கு மட்டுமே! மனிதருகுள் ஒளிந்திருக்கும் மிருகத்துக்கல்ல!

    இதை மிருகம் கேட்டால் அவனோடு என்னை ஒப்பிடாதே என உரக்ககத்தும் இல்லையா ஜெய்லானி..

    பதிலளிநீக்கு
  16. S Maharajan கூறியது...
    //இதுவா மனிதயினம்
    இதுவா மனித குணமென்று
    எங்கிருந்தோ ஒரு
    ஓநாயின் ஊளை கேட்டது
    அது
    மனச்சாட்சியுள்ள மனித
    மனச்செவியை மட்டும்
    சுட்டது//

    வலியுள்ள கவிதை
    இதுவே ஒரு கதை சொல்கிறது./

    தொடர் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி மகராஜன்..

    பதிலளிநீக்கு
  17. வாக்குமூலம் கூறியது...
    மனிதன் மனிதனை நேசிக்கக் கற்றுக் கொண்டாலே ஒழிய இறைவனை நேசித்து இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வருமென்று நான் நம்ப வில்லை.இறைவனின் பெயரால் தான் பல தில்லுமுல்லுகளை நம் சமூகம் நடத்திப் போகிறது. ஆயினும் உலக ஒழுங்கிற்காக இறைவனையாவது நாம் தொழுது நல்லவர்களாக முயற்சித்தல் அவசியமாகிறது. உங்கள் கவிதைக்கு என் வாழ்த்து.
    ரமோனா.//

    இறைவனை புரியாமலும். இறைவனை நேசிக்கத்தெரியாதவர்களுமே தவறுகளின் பக்கமும் பாதகச்செயல்களில் பக்கமும் தன்னை செலுத்திக்கொண்டிருப்பார்.
    தில்லுமுல்லு இறைவனின் பெயரில் செய்பருக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

    உலக ஒழுங்கிற்காக மட்டும்மல்ல தன்னை ஒழுக்கமாக வைத்துக்கொண்டாலே இவ்வுலகம் தன்னைப்பார்த்து கற்றுக்கொள்ளட்டும் என்பது என்கருத்து.

    ரமோனா. தாங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. mythees கூறியது...
    அருமை ....//

    நன்றி மைதீஸ்..

    //நாடோடி கூறியது...
    வ‌லியுடைய‌ வ‌லிமையான‌ க‌விதை//

    மிக்க நன்றி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  19. /சுல்தான் கூறியது...
    யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு சூடான செய்திகள் வேண்டும். நாளை சூடான செய்திகளில் நாமும் இடம் பெறக்கூடும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை//

    நிச்சியம் இன்று அவர் நாளை நாம் அது எதுவாகவும் இருக்கலாம் நமக்கென்ன என்னும் பட்சத்தில் நமக்கென்று ஒன்று வரும்போது நாமும் அவருக்கு நமக்கென்ன.

    மிகுந்த மகிழ்ச்சி
    இருமுறை சொல்லிக்கிறேன் தாங்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  20. மின்மினி கூறியது...
    வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இப்படி எத்தனை எத்தனை பெண்களின் கண்ணீரில் ஒரு காவியமே.. நல்ல அருமையான கவிதை மலிக்கா அக்கா./

    ஆங்காங்கே இதுபோன்று அல்லப்படும் அவதிப்படும் பெண்களின் நிலை என்றுமாறுமோ என்று ஆதங்கம்தான் படமுடிகிறது மின்மினி

    //மனம் கல்லாய் போன‌
    மனிதனிடமிருந்து
    வந்தது வார்த்தைகள்
    கல் தடுக்கிவிட்டதென‌//

    மிக அழகான கவிதை




    //மின்மினி கூறியது...
    அருமையான கவிதை..வாழ்த்துகள் மலிக்கா//

    அன்பானன் கருத்துக்கும் அழகான கவிதைக்கும் மனநிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி மின்மினி

    பதிலளிநீக்கு
  21. /அஹமது இர்ஷாத் கூறியது...
    //எங்கிருந்தோ ஒரு
    ஓநாயின் ஊளை கேட்டது
    அது
    மனச்சாட்சியுள்ள மனித
    மனச்செவியை மட்டும்
    சுட்டது..//

    நச் வரி/

    மிக்க நன்றி இர்ஷாத்

    பதிலளிநீக்கு
  22. ஹுஸைனம்மா கூறியது...
    வழக்கு போட தைரியம் இருந்த பெண், கடைசியில் நொந்து தற்கொலை செய்துகொண்டாள் என முடிக்காமல், தன் முயற்சியில் வென்றாள்னு முடிச்சுருக்கலாம் மலிக்கா. அட்லீஸ்ட் படிக்கிறதுக்காவது நம்பிக்கையூட்டும் விதமா இருந்திருக்கும்//

    நம்பிக்கை சிலநேரங்களில் சருக்கிவிடும்போது இப்படியாகிவிடுகிறது என்பதை சுட்டிக்காட்டவே அப்படி முடித்தேன் ஹுசைனம்மா.[நிறைய இடங்களில் இதுதானே முடிவாக இருக்கிறது கோலைகளாகிவிடுகிறார்கள் தன்மேலேயே இருக்கும் நம்பிக்கை இழந்து]

    ஆனாலும் தன்னம்பிக்கையை இழந்துவிடும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது சரியல்ல.
    தற்கொலை செய்தபின் தன்னையாரும் தவறாக நினைக்கமாட்டாரகள் அப்படியே நினைத்தாலும் நமக்கு தெரியவாப்போகிறது என்ற தவறான கருத்தே இதற்கு காரணம்.

    தற்கொலை எந்தவிதத்திலும் சரியானதேயல்ல.
    பூமிக்கு வந்துவிட்டோம் எதுவாக ஆனாலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவோம் என்ற எண்ணமிருந்தால் போதும் சாதித்து நிற்கலாம் வாழ்க்கையையும் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களையும்.

    பதிலளிநீக்கு
  23. வேதனையாக இருக்கிறது மலிக்கா.விசாரணை என்ற பெயரில் ஓராயிரம் முறைகள் கொடுமைப்படுகிறாள்.

    பதிலளிநீக்கு
  24. நரகல் நிகழ்வுகளை வலியுடன் கவிபுனைந்து இருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  25. செவ்வியல் (classic) தரத்தில் கவிதை இருக்கிறது. தொடர்ந்து எழுதுக.
    கவிஞர்கள் பாமா, சல்மா, லீனா மணிமேகலை போன்றவர்களை வாசிப்பது கவிதைத் தளத்தில் ​மென்மேலும் பிரகாசிக்க உதவும்!
    இன்ஷா அல்லாஹ் :))

    பதிலளிநீக்கு
  26. "நீரோடை" புதிய போட்டோ சூப்பர்....
    இது... இதுதான்... உண்மையான "நீரோடை"..

    'ஹிகூ'வில்

    ஹய்...
    நீரோடையில் - ஓர்
    "நீரோடை"....

    நாங்களும் கவிஞர்தானுங்கோ.... (அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க...)

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  27. மிக அருமையாக எழுதியிருக்கிறீங்கள் மலிக்கா. நல்ல கவிதை. படித்து முடிக்கையில் என் இதயமும் சுட்டுவிட்டது....

    பதிலளிநீக்கு
  28. என்னடி கவிதையிது????மலிக்கா அக்கா இது மரியாதை குறைவான 'டி'யல்ல.வியப்பு!
    அருமையான எழுத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. நல்ல கவிதை. தெளிவான வரிகள், ஆனால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாத நம் கோழைத்தனத்தை என்ன செய்ய?

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது