நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தனிமை! ஒரு தவம்!



தவிப்புகள் அடங்கிய தடாகம்  
இதில் பலவேளைகளில்
தவணை முறையில் நிகழும் மரணம்

சிலநேரம் சங்கடம்!
சிலநேரம் சந்தோஷம்!
சிலநேரம் அமைதி!
சிலநேரம் அலறல்!
சிலநேரம் வெறுமை!
சிலநேரம் கொடுமையென
சிக்கலாக்கி சிக்கெடுக்கும் மாயமந்திரம்!

சிந்தனையை தெளியவைத்து
சிந்தையை சிதறவைக்கும்
சிதம்பர ரகசியம்!
சிரித்து ரசிக்கவைக்கும்! -பலவேளை
சிந்தி அழவும் வைக்கும்!

ஆளில்லாமல் தவிக்கும் தனிமை
ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும்!
ஆறுதலுக்காக தேடும் தனிமை
அழுகையில் கொட்டித்தீர்க்கும்!

அனைத்தும் அருகிலிருந்தும் தனிமை
ஆத்மார்த்த அன்பை தேடித்தவிக்கும்!
அன்பைச் சுமந்த தனிமை
அடிக்கடி தானே சிரிக்கும்!

முதுமை கொண்ட தனிமை -வெற்று
முற்றத்தையே வெறித்துப்பார்க்கும்!
இறுதியில்,,,,
முடிவு கொண்ட தனிமை - மீண்டும்
மூச்சை கேட்டுத் துடிக்கும்!

தனிமை ஒருவித தவம் -அது
கலைந்தாலும்  தவிப்பு!
தொடர்ந்தாலும் தவிப்பு!
இத் ”தனிமை”யில் இருக்கிறது
பல பல ரகசியம்
இதில் சிக்குவோரே
இவ்வுலகில் அதிகமதிகம்...

”இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழின் ”தனிமை” என்ற தலைப்பிற்காக எழுதியது’

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

11 கருத்துகள்:

  1. //தனிமை ஒருவித தவம் -அது
    கலைந்தாலும் தவிப்பு!
    தொடர்ந்தாலும் தவிப்பு!
    இத் ”தனிமை”யில் இருக்கிறது
    பல பல ரகசியம்
    இதில் சிக்குவோரே
    இவ்வுலகில் அதிகமதிகம்...//உண்மை சகோ

    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  2. தனிமைப்பற்றி அழகிய தந்ததைக்கு வாழ்த்துக்கள்

    அதெப்படி உங்களால் அனைத்திலும் இன்பம் காணமுடிகிறது.

    உங்களின் குணம் சிறப்பானதாக இருக்கவேண்டும் இல்லையெனில் இப்படியெல்லாம் கவிதைகள் உணர்வுப்பூர்வமாக எழுதுவது எப்படி சாத்தியம்

    வாழ்க தமிழ் வளர்க அரசி.

    அரசின்னா நீங்க தான் முகநூலில் உங்கள் பெயருக்கு அர்த்தம் கண்டேன்.பொருத்தமான பெயர்தான்.

    பெயர் வைத்தவங்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை.

    //அனைத்தும் அருகிலிருந்தும் தனிமை
    ஆத்மார்த்த அன்பை தேடித்தவிக்கும்!//

    மிகவும் பிடித்த வரிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தனிமை வரமாயும்,சாபமாயும் வாய்க்கப்பெற்ற வாழ்க்கையில் இனிக்கவும் கசக்கவுமாய் செய்கிறதுதான் சமயத்தில்/
    நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்.. அருமையா இருக்கு..

    பதிலளிநீக்கு
  6. ‘தனிமை’.... எனும் தலைப்பில் மார்ச் 2010ல்...
    இந்த காஞ்சி முரளி... கிறுக்கிய கிறுக்கல்கள்...!

    ‘தனி’ என்பது என்றும்
    தனித்தன்மையாய்
    தானாய் இயங்கா.....

    இத்‘தனி’யில் உருவான
    ‘தனிமை’....
    தனியொரு
    மனிதனுக்கும்
    சமுதாயத்திற்கும்
    இடரே தவிர,
    இன்பமாய்
    இருப்பதில்லை.......

    ஓரறிவு முதல்
    ஆறறிவு வரை
    ‘தனிமை’யாய்
    தனித்துவிடப்பட்டாமல், -
    அதற்கது
    தண்டனைதான்....

    கூட்டத்தில் சேரா
    ‘தனி’ மனிதனும்...

    கூட்டுக் குடும்பத்தில் சேரா
    ‘தனிக்’ குடித்தனமும்...

    ஒட்டுமொத்த சமுதாயத்தில் சேரா
    ‘தனிச்’ சமுதாயமும்...

    என்றும்
    எப்போதும்
    அவலத்திற்குரிய
    ‘அனாதைகள்’தான்....

    ‘தனிமை’யென்பது
    தவசிகளுக்கு வேண்டுமானால்
    ‘வரமாய்’ இருக்கலாம்....

    மனிதருக்கும்
    மானுட சமுதாயத்திற்கும்
    என்றுமது
    ‘சாபம்’தான்....!

    இத் ‘தனிமை’
    தனியாவர்த்தனத்துடன்
    பரவலாய்
    இச்சமுதாயத்தின்
    இரத்த நாளங்களிலல்ல,
    இதயத்திலே.....
    புரையோடிவிட்ட - இந்தப்
    புற்றுநோயால்....
    மரணத்தின் நாட்களை
    எண்ணிக் கொண்டிக்கிறது
    இச்சமுதாயம்....!



    எப்புடி...????

    பதிலளிநீக்கு
  7. -
    மேலே '‘தனிமை’.... கிறுக்கிய கிறுக்கல்கள்...
    கிறுக்க தூண்டிய நிகழ்வு...!

    ‘குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன்’ என்று அறிவியல் நிரூபணம் செய்திருக்கிறது. இப்படி குரங்கை மூதாதையர்களாக கொண்ட மனிதயினம், குரங்கைப் போல கூட்டகூட்டமாய்தான் வாழ்ந்திருக்க வேண்டும். ‘தனி’யாய் இருந்திருந்தால், சந்ததி உருவாகியிருக்க முடியாது. ஆனால், மனிதன் ‘தனிமை’யில் வாழ விரும்புகிறேன் என்று வாயால் சொன்னாலும்... ‘தனிமை’யில் இனிமை அவனால் காண முடியாது. அவனை தனியாய் ஓர் தீவில் விட்டுப்பாருங்கள்... சிலநாட்களிலேயே பைத்தியமாகி வெறிபிடித்த மிருகமாகிவிடுவான். எனவே, மனிதனின் இயல்பே கூட்டமாய்த்தான்.
    என் நினைவு மின்னல் கீற்றிலிருந்து, எனது இளமைப் பருவமான 1970களில் இந்த நாடும், சமுதாயமும், வீடும், மனிதனும் கூட்டமாய்த்தான். அப்போது நாட்டுப்பற்றும், சமுதாயப்பற்றும், வீட்டுப்பற்றும், மனிதன்மீது மனிதன் செலுத்தும் பற்றும் மிகுந்து நாடும், சமுதாயமும், வீடும், மனிதனும் சந்தோஷமாய்.... ஆனால், இப்போது.... இன்றைக்கு..... மனிதன் தனித்து இயங்க துவங்கியுள்ளதால்... இந்த நாடும்,
    இச்சமுதாயமும் எந்தளவிற்கு சீர்கேடு அடைந்திருக்கிறது என்பதற்கான அடையாளங்களை நம் கண்ணெதிரே கண்டுக் கொண்டிருக்கின்றோம்.
    கண்ணெதிரே கண்டதில் என்பதைவிட, நான் அனுபவிக்கும் வலிகளில் ஒன்றினைத்தான் கீழே... நான் பிறந்தது பெரிய குடும்பத்தில். தாய்,தந்தை, அண்ணன், தம்பி, சகோதரி என்று கூட்டமாய் கூட்டுக்குடும்பம். காலமாற்றத்தின் விளைவாகவும் - காலக் கட்டாயத்தின்படி, தற்போது எல்லோரும் தனித்தனியே தனிக்குடித்தனங்களாய்... தனிக்குடித்தனம் வந்த புதிதில், இதனை ‘வரமாய்’ நினைத்தேன்... சில வருடங்களிலேயே,
    அது ‘சாபம்’ என்றறறிந்தேன். என் பாலப்பருவத்தில் படத்துடன் கதையாக படித்த ‘நான்கு எருதுகள் - ஒரு சிங்கம் - ஒரு நரி’ கதைதான் தற்போது என் நினைவுக்கு வருகிறது. இப்போது நான் வசதியுடன்தான்.... ஆனால், ஒர் உடல்நலக்குறைவோ அல்லது அவசரத்தேவையோ என்றால் சுற்றங்கள் சுற்றியிருந்தும் ‘அனாதை’யாய்த்தான்.... இத்தனிமை நமது சமுதாயத்தில் பரவலாய் பரவி வரும் புரையோடிய புற்றுநோய்.... இதை தடுக்கவும் முடியாது.... குணப்படுத்தவும் முடியாது... நான் அனுபவிக்கும் அவ்வலியின் விளைவுதான் இந்த ‘தனிமை’.......!

    எப்புடி...????

    பதிலளிநீக்கு
  8. தனிமையென்னும்
    தவிப்புக்கும் தாத்திற்கும்
    இனிமைக்கும் புதுமைக்கும்
    ஏற்றதுபோல் தங்கள் அனைவரின் கருத்துகளையும் தந்து
    தனிமைக்கு துணைவந்த அனைத்துள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  9. காஞ்சி புலவரின் கருத்துகள் அடங்கிய ”தனிமையில்” மிக அருமையான கருத்துகள் உள்ளடங்கிடக்கின்றன.. வலிகளும் வேதனைகளும் அனுபவிக்கும்போதுமட்டுமே உணரமுடியும் என்பதை உணர்த்தும் கவிதையது.. பாராட்டுகள் முரளியாரே!

    பதிலளிநீக்கு
  10. சிலபல நாட்களுக்குமுன்...
    யார் தளத்திலேயோ....
    "தனிமை" என்பதற்கு நான் தந்த விளக்கம்...!

    இது..!

    உங்க "தனிமை ஒரு தவம்" என்ற கவிதைக்கு பதிலாய்கூட வைத்துக்கொள்ளலாம்...!

    "தனிமை"

    "தனிமை" என்பதே ஓர் வரம் என எண்ணுபவன் நான்...!

    எனக்குள் நானே
    என்னை நுழைத்து...
    ஓர் பார்வையாளனாய்...!
    ஓர் விமர்சகனாய்...!
    என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நிலையை..
    என் "தனிமை"
    எனக்களிக்கும்...!

    எவன் ஒருவன் "தனிமை"யில் மூழ்கி...!
    தன்னோடு தானே...!
    தன் நடத்தையை...
    தான் நடந்துகொண்டதை...
    தற்பரிசோதனைக்கு
    உள்ளாக்கிக்கொள்கிறானோ.... அவனே
    "மனிதன்"...!

    ஒருவன் தன்னைப் படைத்த இறைவனிடமும் பொய் சொல்லலாம்...!
    ஆனால்..!
    தனிமையில்...
    தன்னைத்தான் கேட்கும் கேள்விகளுக்கு...
    பதிலாய்...
    பொய் சொல்லமுடியாது...!

    காரணம்...!

    தான் செய்த செயலின் காரணியாய்...
    உடந்தையாய்...
    அல்லது
    செய்கையை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது... தன் மனது
    என்பது தனக்கே தெரியும்...!

    எனவே...!

    "தனிமை"யை நான் நேசிக்கிறேன்...!

    நண்பர்களே...!

    ஆனால்...!

    இப்போது...
    இன்றைய இளைஞர்கள்...
    குறிப்பாய் இளைஞ்சிகள்...!

    "தனிமை"யில்
    தன்னைத்தானே சிந்தித்து...!
    நல்லவனா...!
    தன் நடவடிக்கைகள் சரிதானா...!
    தான் நடந்துகொள்ளும் விதம் சரிதானா..! என
    தன்னையே தான்
    "தனிமை"யில்
    சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்புவதே இல்லை...!

    எப்போதும்...!
    மொபைல் "ஹெட் போன்" ஒயரை சொருகி...!
    தன்னைப் பற்றி சிந்திக்காமல்
    இரவும் பகலும்...!
    பணியிலும்...! ஓய்விலும்...!
    பேருந்து பயணத்திலும்...!
    நிற்கும்போதும்...
    நடக்கும்போதும்...
    வாக்கிங் என்று ஓடும்போதும்
    கனவுகளிலேயே...!
    பாடல் எனும் கனவுகளிலேயே...!
    தன் சிந்தனையை செலுத்திக்கொண்டிருக்கிரார்கள்...!

    இதனால்...!
    இவர்கள்... தன்னை பற்றி சிந்திப்பதையே மறந்துபோகிறார்கள்...!

    "தனிமை"யில் சிந்திப்பதால்...
    இன்று நாம் செய்த நல்லவைகள் என்ன? கெட்டவைகள் என்ன? என்று தனக்குள்ளேயே தான் கேள்வி எழுப்பினால்... தன் மனதே தகுந்த பதில் அளிக்கும்... அதற்கொரு வாய்ப்பை "தனிமை" அளிக்கும்...! சிந்தனை சக்தி வளரும்...!

    ஆனால்...!

    இவர்கள்...
    "பாதை இங்கே...
    பயணம் எங்கே...!
    மயங்கும் நெஞ்சே...!" என்று பாடல் வரிகளைப் போல...!
    மயக்கத்திலே உலவி வருகிறார்கள்...!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது