நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தனிமை! ஒரு தவம்!



தவிப்புகள் அடங்கிய தடாகம்  
இதில் பலவேளைகளில்
தவணை முறையில் நிகழும் மரணம்

சிலநேரம் சங்கடம்!
சிலநேரம் சந்தோஷம்!
சிலநேரம் அமைதி!
சிலநேரம் அலறல்!
சிலநேரம் வெறுமை!
சிலநேரம் கொடுமையென
சிக்கலாக்கி சிக்கெடுக்கும் மாயமந்திரம்!

சிந்தனையை தெளியவைத்து
சிந்தையை சிதறவைக்கும்
சிதம்பர ரகசியம்!
சிரித்து ரசிக்கவைக்கும்! -பலவேளை
சிந்தி அழவும் வைக்கும்!

ஆளில்லாமல் தவிக்கும் தனிமை
ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும்!
ஆறுதலுக்காக தேடும் தனிமை
அழுகையில் கொட்டித்தீர்க்கும்!

அனைத்தும் அருகிலிருந்தும் தனிமை
ஆத்மார்த்த அன்பை தேடித்தவிக்கும்!
அன்பைச் சுமந்த தனிமை
அடிக்கடி தானே சிரிக்கும்!

முதுமை கொண்ட தனிமை -வெற்று
முற்றத்தையே வெறித்துப்பார்க்கும்!
இறுதியில்,,,,
முடிவு கொண்ட தனிமை - மீண்டும்
மூச்சை கேட்டுத் துடிக்கும்!

தனிமை ஒருவித தவம் -அது
கலைந்தாலும்  தவிப்பு!
தொடர்ந்தாலும் தவிப்பு!
இத் ”தனிமை”யில் இருக்கிறது
பல பல ரகசியம்
இதில் சிக்குவோரே
இவ்வுலகில் அதிகமதிகம்...

”இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழின் ”தனிமை” என்ற தலைப்பிற்காக எழுதியது’

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எதிரும் புதிரும்.

 
இருக்கு என்கிறேன்
இல்லை என்கிறாய்!

நெருப்பு என்கிறேன்
புகை என்கிறாய்!

நீர் என்கிறேன்
கானல் என்கிறாய்!

கவிதை என்கிறாய்!
கிறுக்கல் என்கிறேன்

மனம் என்கிறேன்
சிறை என்கிறாய்!

எதிர் என்கிறேன்
நீ புதிர் காண்கிறாய்!

நான் காதல் என்கிறேன்
நீ மோதல் கொள்கிறாய்!

நீ எனக்கு என்கிறேன்
நீ எதற்க்கு என்கிறாய்!

இருவருக்குள் எப்போதும்
எதிரும் புதிருந்தான்!

இருந்தபோதும் 
இனிக்கிறதே!இல்ல[ற]ம்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது